பேராவூரணி: பேராவூரணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் முனைவர் க.சற்குணம் பாராட்டப்பட்டார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலை இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது கலை இலக்கிய கூடல் நிகழ்ச்சியில் " இந்தியாவில் சாதிகள் " என்ற அம்பேத்கர் எழுதிய நூற்றாண்டு கண்ட ஆய்வு நூல் வாசிக்கப்பட்டது. கவிஞர்களின் கவியரங்கமும், காலா திரைப்பட விமர்சனமும் விவாதமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 100 விழுக்காடு தேர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றிய பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் க.சற்குணத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய ஆசிரியர் சற்குணம் "ஏழ்மையும் வறுமையும் வைராக்கியத்தை வளர்க்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் பரம ஏழை குடும்பத்தில் இருந்து வருபவர்கள். அவர்களிடம் அதிக தன்னம்பிக்கை உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மாதிரிகளாக செயல்பட வேண்டும். ஏழ்மை குடும்ப சூழல் நான் நன்கு அறிந்தது, அனுபவித்தது. இதனால் மாணவர்களிடம் கல்வியின் அவசியத்தை நன்கு என்னால் கூறமுடிகிறது. இந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பலதரப்பட்ட இளைஞர்களுக்கும் உற்சாகத்தையும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகவும் உள்ளது" என்றார்.
நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சு.சமந்தா, செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், சிபிஎம் பொறுப்பாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், பேராசிரியர் முனைவர் ச.கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment