Thursday, 28 June 2018

விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காரீப்பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2018ம் ஆண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில்1024 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட் டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில்இத்திட்டத்தை செயல்படுத்தும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். குறுவை பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 இதரகாரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 16 ஆகும். பயிர் காப்பீட்டு கட்டணமாக, விவசாயிகள் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531, இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.405, உளுந்து மற்றும் பச்சை பயறுக்கு ஏக்கருக்கு ரூ.286, நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.476 மற்றும் எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.240 செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment