Sunday 1 July 2018

கால்நடை வளர்ப்பில் ஈடுபட பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை

வலப்பிரமன்காடு: பேராவூரணி வட்டாரத்தில் வலப்பிரம ன்காடு கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் (இன்டகிரேட்டட் பார்மிங் சிஸ்டம்) குறித்த விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தலைமை வகித்தார். இதில் வேளாண்துறை அதிகாரிகள் பேசுகையில், "விவசாயிகள் பயிர் சாகுபடி மட்டுமின்றி, அதனுடன் உபரி வருமானம் கொடுக்கக்கூடிய ஆடு, மாடுகள் வளர்த்தால் மண் கூடுதல் வளம் பெருகிறது. பயிர் கழிவுகள் மட்கச் செய்து ஆர்கானிக் கம்போஸ்ட் அல்லது மண்புழு உரமாக மாற்றி மீண்டும் மண்ணில் இடுவதன் மூலம் மண்ணின் பௌதீக தன்மை அதிகரிக்கிறது. நன்மை செய்யும் உயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண், நீர், காற்று மாசுபாடு அடைவது தடுக்கப்படுகிறது.  நன்செய், புன்செய் மற்றும் மானாவாரி நிலங்களுக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட திட்டம் வகுத்து செயல்படுத்தும் போது, ஒரு முறைக்கு மேல் பயிர் சாகுபடி செய்திடும் நிகர பரப்பு அதிகரிக்கிறது. அதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுகிறது. வேலையில்லா திண்டாட்டம் குறைகிறது, விவசாயத் தொழிலாளிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.  எனவே விவசாயிகள் அனைவரும் மண்வளம், நீர்வளம், சூரிய ஒளி மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பயன்பெறலாம். மேலும் வேளாண் பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள், மலர் செடிகள், காய்கறி பயிர்கள், கொடிவகை காய்கறி பயிர்கள் பயிரிடுதல் மற்றும் கால்நடைகள் வளர்த்தல், கோழிப்பண்ணைகள் அமைத்தல், மீன் குட்டைகளில் நாட்டு மீன்கள் வளர்த்தல், மரம் வளர்த்தல், தீவனப்புல் வளர்த்தல் போன்றவற்றை செய்து வருமானம் ஈட்டலாம்" என்றனர்.

No comments:

Post a Comment