தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டில் இதுவரை ரூ.130 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 82 லட்சம் மனிதசக்தி நாட்கள் பல்வேறு வேலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தஞ்சை மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கீட்டில் 85 சதவீதம் ஆகும்.
இதில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் வாய்க்கால், ஆற்றுப்பகுதிகளில் சிற்றோடைகள் மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் நீரை சேமித்தல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பூமிக்குள் அனுப்பும் வகையில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுவதும் தடுக்கப்படும். இதன் மூலம் வீடு, கிராமங்கள் சுத்தமாக இருக்கும். கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரக்குழிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளில் இருந்து பெறப்படும் சாணங்களை, உரக்குழிகள் ஏற்படுத்தி அதில் மண்புழு உரம் தயாரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலையோரங்களில் ஆடு, மாடுகளின் சாணங்கள் சேகரிப்பது தடுக்கப்படும்.
இதன் மூலம் அதிக தழைச்சத்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டங்களில் பயன்பெற கிராம புறங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாரவளர்ச்சி அதிகாரிகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த நீர் உறிஞ்சுக்குழிகள், உரக்குழிகள் இலவசமாக அமைக்கப்படுகின்றன. இந்த குழிகள் அமைப்பதற்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
அனைத்து கிராமங்களிலும் நீரை சேமிக்கும் வகையில் சிறு, குறு, விவசாயிகளின் வயல்களில் மண் வரப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மண் அரிப்புகள் தடுக்கப்படுகின்றன. கிராம புறங்களில் உள்ள மண்சாலைகள் ஜல்லிசாலைகளாக மாற்றிஅமைக்கப்பட்டு வருகிறது. அரசு நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் சுற்றுச்சுவரும்கட்டப்பட்டு இந்த பணிகளில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகளை 14 வட்டார வளர்ச்சி அதிகாரிகள், 200 ஒன்றிய பொறியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களது இடங்களில் இந்த பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகளில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கண்காணிக்க 7 வகையான பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடங்கி முடியும் போது புகைப்படங்களை எடுத்து வைப்பதோடு, இதனை ஆன்லைன் மூலம் பார்க்கும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் தெரிவித்தார்.
குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி தெற்கு ஊராட்சி. இங்கு தொடக்கப்பள்ளி அருகே 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இது பழுதடைந்து இருப்பதால் கடந்த ஒரு ஆண்டாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி செருவாவிடுதி தெற்கு ஊராட்சி பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்று செருவாவிடுதியில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடைவீதியில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி ஒன்றிய ஆணையர் குமாரவடிவேல், பட்டுக்கோட்டை தாசில்தார் (பொறுப்பு) ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், ஜனார்த்தனம் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற செருவாவிடுதிக்கு சென்று கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வாரத்துக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment