சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக 4000 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4000 பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்ளன. இவை அனைத்தும் விசை படகு செல்லக்கூடிய திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் தற்போது விசை படகிற்கு மீன்பிடி தடைகாலம் என்பதால், நாட்டுபடகுகள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இரண்டு தினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்ட குழுவினர் சுமார் 13 பேர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடைவீதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்த கடைகளையும் அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள 4000 நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை அந்தந்ந கிராமங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment