Tuesday, 29 May 2018

தஞ்சை மாவட்டத்தில் உயர் மட்ட பாலங்கள் கட்டுவதற்கு ரூ.98.6 கோடி நிதி ஒதுக்கீடு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 20 புதிய உயர் மட்ட பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.98.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிரந்தர சீரமைப்பு பணிகள் 2018&19ம் ஆண்டு திட்டத்தின்கீழ் தமிழக அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பாபநாசம் அருகே நல்லூர் குடமுருட்டி ஆற்றின்மேல் ரூ.2.8 கோடி மதிப்பிலும், முடிகொண்டான் ஆற்றின் மேல் ரூ.1.4 கோடி மதிப்பிலும், சுந்தரபெருமாள் கோயில் திருமலைராஜன் ஆற்றின் மேல் ரூ.2.1 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. ஒரத்தநாடு அருகே பட்டுதாக்கில் மகாராஜசமுத்திரம் ஆற்றின் மேல் ரூ.4.5 கோடி மதிப்பிலும், ஒக்கநாடு கீழையூரில் கண்ணணாற்றின் மேல் ரூ.2.1 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது.    பட்டுக்கோட்டை அருகே கார்காவயல் மகாராஜசமுத்திரம் உபரிநீர் ஓடையின் மேல் ரூ.2.8 கோடி மதிப்பிலும் சொக்கனாவூர் கல்வாரி ஆற்றின் மேல் ரூ.4.2 கோடி மதிப்பிலும், பரக்கலாக்கோட்டை பாட்டுவநாச்சி ஆற்றின் மேல் ரூ.3.2 கோடி மதிப்பிலும், தாமரங்கோட்டை பாட்டுவநாச்சி ஆற்றின் மேல் ரூ.3.5 கோடி மதிப்பிலும், கார்காவயல் மகாராஜசமுத்திரம் ஆற்றின் மேல் ரூ.9.45 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. பேராவூரணி அருகே துவரமடையில் நரியாற்றின் மேல் ரூ.3.25 கோடி மதிப்பிலும், பூக்கொல்லையில் பூனைகுத்தி ஆற்றின்மேல் ரூ.6.1 கோடி மதிப்பிலும், கொரட்டூரில் அம்புலியாற்றின்மேல் ரூ.8.15 கோடி மதிப்பிலும், சின்ன ரெட்வயல் அம்புலியாறு கிளையின் மேல் ரூ.6.1 கோடி மதிப்பிலும். ரெட்டவயல் மருதங்குடி ஆற்றின்மேல் ரூ.9.4 கோடி மதிப்பிலும், தூரங்குடி முடியனாற்றின் மேல் ரூ.7.7 கோடி மதிப்பிலும், பூவானத்தில் அக்னியாற்றின் மேல் ரூ.1.12 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.  திருவையாறு அருகே வண்ணாரப்பேட்டைல் முதலைமுத்துவாரி ஆற்றின் மேல் ரூ.3.5 கோடி மதிப்பிலும், ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றின்மேல் ரூ.5.25 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. கும்பகோணம் அருகே அம்மன்பேட்டையில் பழவாற்றின் மேல் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மொத்த தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.98.6 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment