பேராவூரணி: பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் ரெட்டவயல் சாலையில் ஒதுக்குப்புறமாக வயல்வெளியில் டாஸ்மாக் கடை (எண் 8029) இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக கேசவராஜ் என்பவரும், விற்பனையாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, ராஜா ஆகியோரும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கடை திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், கேசவராஜூவுக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்த போது, கடையின் இரும்பு ஷட்டர் கதவை உடைத்து பெயர்த்து கடையினுள் புகுந்த நபர்கள் சில்லறைக்காக வைத்திருந்த ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் கேசவராஜ், டாஸ்மாக் உயர் அலுவலர்களுக்கும், பேராவூரணி காவல்துறைக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தை டாஸ்மாக் அலுவலர் திருஞானம், காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பார்வையிட்டனர். மதுக்கடையை உடைத்து ரொக்கம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment