Monday, 18 June 2018

பேராவூரணி வட்டாரத்திற்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவ ரூ.1.70 கோடி ஒதுக்கீடு

தஞ்சாவூர்:நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைப்பதற்கு 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக பேராவூரணி வட்டாரத்திற்கு ரூ.1.70 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:"நீர் ஆதாரங்களை வரன்முறைபடுத்தி கட்டுக்கோப்பு பாசன முறைகளை கையாண்டு ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக பயிர் மகசூலையும், தனி மனித வருமானத்தையும் பெருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமே ‘நுண்ணீர் பாசனம்’ ஆகும்.நுண்ணீர் பாசனம் என்பது சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், ரெயின்கன் பாசனம் ஆகியனவாகும்.  சொட்டு நீர் பாசனமானது தென்னை, கரும்பு, பாமாயில், காய்கறி பயிர்கள், மக்காச்சோளம், மலர்பயிர்கள், பழப்பயிர்கள் மற்றும் மரப்பயிர்களுக்கு செயல்படுத்தக் கூடியது ஆகும். தற்போது பேராவூரணி வட்டாரத்தில் 2017-18-ஆம் ஆண்டு திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடாக ரூ.80 லட்சமும் 2018-19 ஆண்டு திட்டம் செயல்படுத்த ரூ.90 லட்சமும் ஆக கூடுதலாக ரூ. 170 லட்சம் (1.70கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி 2017-18 ஆம் ஆண்டு திட்ட ஒதுக்கீட்டின்படி தென்னையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 109 ஹெக்டேருக்கு, ஹெக்டேர் 1 க்கு ரூ.24,795 என்ற மானிய விகிதத்தில் ரூ.27.03 லட்சமும், கரும்பு பயிரில் 1.28 ஹெக்டேருக்கு, ஹெக்டேர் 1-க்கு ரூ.80,000 என்ற மானிய விகிதத்தில் ரூ.1.024 லட்சமும் பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 77 ஹெக்டேருக்கு, ஹெக்டேர் 1 க்கு ரூ.20,750 என்ற மானிய விகிதத்தில் ரூ.15.98 லட்சமும் ரெயின்கன் பாசனம் அமைக்க 116 ஹெக்டேருக்கு, ஹெக்டேர் 1-க்கு ரூ.31,104 என்ற மானிய விகிதத்தில் ரூ.36.08 லட்சமும் என கூடுதலாக ரூ.80.11 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டம் 2018 ஜூலை 31 ஆம் தேதியுடன் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு அட்டை, அலைபேசி எண், மின் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் கலர் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி உடனே ஆன்-லைன் பதிவு செய்து கொண்டு திட்டப் பயன்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment