Wednesday, 20 June 2018

போதிய அளவு மீன்கள் பிடிபடவில்லை கடலுக்குச் சென்ற மல்லிப்பட்டினம் மீனவர்கள் ஏமாற்றம்

தஞ்சாவூர்: இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்றுதிரும்பிய தஞ்சை மாவட்ட மீனவர்கள் போதிய அளவு மீன்கள்பிடிபடாததால் கடும் ஏமாற்றமடைந்தனர். மேலும் படகு உரிமையாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டுள் ளதால் கவலை அடைந்துள்ளனர்.மீன்கள் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டிற்கு ஒருமுறை மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 45 நாட்களாக இருந்த மீன்பிடித்தடைக்காலம் தற்போது 60 நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இருந்து ஏராளமானமீனவர்கள் தங்கள் விசைப்படகுகள் மூலம் கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். மீனவர்கள் வலைகளில் போதிய அளவு மீன்கள் சிக்கவில்லை. இதனால், தொழிலுக்கு சென்ற மீனவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இதனால் படகுகளுக்கு செலவிட்ட எரிபொருள் செலவு, தொழிலாளர்கள் சம்பளம், உணவுச் செலவு மற்றும்நிர்வாக செலவுகளுக்குக் கூட, வருமானத்தை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.இதுகுறித்து தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநிலச் செயலாளரும் விசைப்படகு உரிமையாளருமான மல்லிப்பட்டினம் தாஜூதீன் கூறுகையில், “ மீன்பிடித் தடைக்காலத்தில் ஒவ்வொரு விசைப்படகையும் மராமத்து செய்ய ரூ. 1 லட்சம் முதல் 3 லட்சம்வரை செலவாகிறது. மீன்பிடிக்கச் சென்ற முதல்நாள் படகுகளுக்கு சுமார் 300 லிட்டர் வரை டீசல் நிரப்பவேண்டி வந்தது. சராசரி டீசல் செலவு ரூ. 20 முதல் 25 ஆயிரம் வரை ஆகிறது. தொழிலாளர் சம்பளம், ஐஸ், உப்பு மற்ற செலவுகளுக்கே ரூ. 5 ஆயிரம் ஆகிறது. கடலுக்கு ஒருமுறை சென்று வர ரூ. 30 ஆயிரம் செலவாகிறது.போதிய அளவு, மீன், இறால் கள் பிடிபடவில்லை. எதிர்பார்த்த அளவு இல்லாமல் பாதியளவிற்கு தான் மீன், இறால்கள் பிடிபட்டன.  உயர் ரக மீன்களோ, பெரிய வகை இனங்களோ பிடிபடவில்லை. இதனால் மீனவர்களுக்கு சராசரியாக படகு ஒன்றிற்கு ரூ. 5 ஆயிரம்முதல் 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு அறிவித்துள்ளதடைக்காலம் என்பது அறிவியல்பூர்வமாக மீன்கள் இனப்பெருக்கத் திற்கு ஏற்றதாக இல்லை. மழைக் காலங்கள் மட்டுமே மீன்கள் இனப் பெருக்கத்திற்கு ஏற்ற காலமாகும்.  எனவே வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் - நவம்பர் மாதங்களே மீன்பிடித் தடைக்கு ஏற்ற காலமாகும். இந்த காலங்களில் தான் பெருமளவு இயற்கை சீற்றம் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத காலம். எனவே மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதனால் மீன்கள் உற்பத்தி ஆவதோடு, மீனவர்களின் உயிரும் இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பாற்றப்படும். அதேபோல் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையையும் தற்போது உள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.மீனவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்குமா?

No comments:

Post a Comment