Wednesday, 6 June 2018

தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும் முதல் நாளே மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்க வேண்டும் மீனவர் சங்கம் கோரிக்கை

சேதுபாவாசத்திரம்: தஞ்சை கலெக்டர் அண்ணாதுரைக்கு தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 301 விசைப்படகுகள் உள்ளன. இதில் 2,000 மீனவர்கள மீன்பிடி தொழில் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தொழில் செய்ய தடை விதித்து வந்தது. இந்த நடைமுறையை மாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் தடை விதித்து வருகிறது.    45 நாட்கள் தடை விதிக்கும்போதே மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது. தற்போது 61 நாட்கள் என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதுமான பொருளாதாரம் இன்றி விசைப்படகுகளை அவசர கோலத்தில் பராமரிப்பு செய்து தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் தயார் செய்துள்ளனர். வழக்கமாக அனைத்து விசைப்படகுகளுக்கும் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும்போது புதிய வலைகளை தான் வாங்கி பயன்படுத்துவர். ஆனால் இந்தாண்டு பழைய வலைகளை பராமரிப்பு செய்து மீன்பிடி தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசு, 10 நாட்கள் கழித்தே மானிய டீசல் வழங்கி வருகிறது. இந்த நிலையை மாற்றி இந்தாண்டு நலிவடைந்த மீனவர்களின் வருமையை கருத்தில் கொண்டு கடலுக்கு செல்லும் முதல்நாளே எவ்வித தங்கு தடையுமின்றி மானிய டீசல் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment