Friday, 8 June 2018

பேராவூரணி பகுதியில் பழங்குடி சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு



பேராவூரணி: சாதிச் சான்றிதழ் கிடைக்காததால்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பபெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள மேல ஒட்டங்காடு பகுதியில், துணை மின் நிலையம் எதிரே,கே.கே.நகரில் கல்லணைக் கால்வாய்பாசன வாய்க்காலின் ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் ஏறத்தாழ 36 க்கும்மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்களைச் சேர்ந்தோர், குடிசை அமைத்து40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட் டத்தைச் பூர்வீகமாக கொண்ட இவர்கள் இந்து - ஆதியன் எனப்படும்ஷெட்யூல்ட் டிரைப் எனப்படும் பழங் குடியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.  பூம்-பூம் மாடு, சோதிடம் பார்ப்பது, அம்மிக்கல் கொத்துவது என ஆரம்ப காலத்தில் தொழில் செய்து வந்த இம்மக்கள் காலப்போக்கில் கூலி வேலைக்குச் செல்லுதல், துக்க வீடுகளுக்கு ட்ரம்-செட் அடித்தல், பறை இசைத்தல், நாயனம் வாசித்தல் என தொழில் செய்து வருகின்றனர்.ஆரம்ப காலங்களில் பள்ளி செல்லாமல் இருந்த இம்மக்கள் தற்போதுவிழிப்புணர்வு காரணமாக தங்கள்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டி வந்தனர். மேலஒட்டங்காடு கே.கே.நகர் பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 40 குழந்தைகளும்,துறவிக்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 25 குழந்தைகளும், பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 10 பிள்ளைகளும் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.இந்த இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்பாமல் உள்ளனர். மேல ஒட்டங்காடு கே.கே.நகர் பகுதியில் குடியிருக்கும் பழங்குடி இன மக்கள் தங்கள் குழந்தைகளை ஒட்டங்காடு,  கொன்றைக்காடு, புனல்வாசல் உள் ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு சாதிச்சான்று இல்லாததால் வெறுப்படைந்த இம்மக்கள், பள்ளி திறந்து ஒருவார காலம் ஆகியுள்ள நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து இக்குடியிருப்பைச் சேர்ந்த கே.குமார் பேசும்போது, நாங்கள் இந்து-ஆதியன் எனப்படும் பழங்குடி (எஸ்.டி) பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்களிடம் இதற்கான சாதிச்சான்று உள்ளது. ஆனால் தற்போதுஎங்கள் குழந்தைகளுக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் ஆதியன்என சான்று வழங்க மறுக்கிறார்கள். கேட்டால் ஆதியன் சாதி மலைவாழ்மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தஇனமக்கள் தஞ்சை மாவட்டத்தில் கிடையாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமே உள்ளனர் என்கின்றனர். வேண்டுமானால் வேறுசாதி போட்டு சான்றிதழ் தருகிறோம் என்கின்றனர். நாடோடிகளாக இடம் பெயர்ந்த நாங்கள், இடம் மாறியதால் சாதி மாறிவிடுவோமா ? இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் போகிறது. கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. இதனால் எங்கள்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. போகட்டும்.... குழந்தைகளும் கூலித் தொழிலையும், குலத்தொழிலையும் பார்க்கட்டும். கல்வித் துறை அதிகாரிகள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) வீடு தேடி வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சொன்னார்கள். முடியாது என மறுத்துவிட்டோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தில் அதிகாரிகள் சான்று வழங்கிஉள்ளனர். ஆனால் இங்கு அதிகாரிகள் நிறைய காரணம் கூறுகிறார்கள்” என்றார் வேதனையுடன்.  இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, “பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்”என முடித்துக் கொண்டனர்.உடனடியாக அந்த இடத்திலிருந்தே பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசுவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டுபேசியபோது, அனைத்து விபரங்களையும் கவனமாக கேட்டுக் கொண்டவர், “ முதலில் பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்புமாறு பெற்றோர்களிடம் சொல்லுங்கள்.  படிப்பு கெட வேண்டாம். ஆதியன் என சான்றிதழ் அவர்களில் யாரேனும் வைத்திருந்தால், விசாரணை செய்து அவர்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கிறேன். உடனடியாக நாளையே புதிதாக சாதிச்சான்று கேட்டு விண்ணப்பிக்க சொல்லுங்கள். என்னையும் சந்திக்க சொல்லுங்கள். அவர்களின் குறைகளை நானே நேரில் சென்று விசாரிக்கிறேன்” என ஆறுதலாக பதிலளித்தார்.பழங்குடி இன மக்களிடம் விபரத்தை கூறி கோட்டாட்சியர், பட்டுக் கோட்டை வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்குமாறு கூறினோம். அரசு இம்மக்களின் குறைதீர்க்குமா ? மாணவர்கள் வாழ்வில் ஒளிஏற்றுமா?

No comments:

Post a Comment