Monday, 4 June 2018

பேராவூரணியில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடையும் மின்கம்பங்கள்

பேராவூரணி: பயன்பாட்டிற்கு வரும் முன்னரே சிமெண்ட் மின் கம்பங்கள் சேதமடைவதும், உடைந்து காணப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. தரமான மின்கம்பங்களை தயாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மின் கம்பங்கள் உடைந்து தொங்குவதும், மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வதும், பொதுவாக இன்று ஒவ்வொரு நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் காணப்படுகிறது. கிராமத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையிலும், அரசின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பயன்படும் விதமானதாகவும், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் சென்று சேருகிறது. ஆனால் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை பராமரிப்பதில் மின்சார வாரியம் உரிய கவனம் செலுத்துவதில்லை.  பேராவூரணி பகுதியில் மின் பாதைக்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய மின்கம்பங்கள் இன்னும் நடப்படாத நிலையிலே சேதமுற்று கிடப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு தயார் செய்யப்பட்டு நடப்படும் மின்கம்பங்கள் உரிய காலத்திற்கு முன்பே சிதிலமடைதல் இயல்பானதாக மாறிவிட்டது.  மின்சார வாரியம் இதுபோன்று மின்கம்பங்கள் உற்பத்தி செய்யும் போது, உரிய தரத்துடன் தயார் செய்யப்படுகிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால் மின்சார வாரியத்திற்கு பொருள் இழப்பையும், பொதுமக்களுக்கு பாது காப்பை உறுதி செய்வதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து ள்ளனர்.  மேலும் இதுபோன்ற தரம் குறைந்த, எப்பொழுது உடைந்து விழுமோ என்ற நிலையில் உள்ள மின்கம்பத்தின் மீது ஏறி நின்று வேலை செய்யும் சாதாரண கடைநிலை மின்ஊழியரின் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியும் எழுகிறது. கிராமங்களில் பல இடங்களில் மின்கம்பம் பலமிழந்து நிற்பதற்கு தரமற்ற தாக மின்கம்பம் தயாரிப்பதே காரணமாக உள்ளது.  எனவே, மின்கம்பங்கள் தயாரிப்பு தரமானதாக இருப்பது அவசியம். எனவே அதற்கு உரிய முறையில் சிமெண்ட் மற்றும் மண் கலவை இருப்பதும், தயாரிக்கப்பட்ட மின்கம்பங்களை தண்ணீரில் மூழ்க வைத்து கெட்டிப்படுத்தப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  மேலும் பொது இடங்களில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்படும் மின்கம்பங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் இவை வீணாகின்றன. அரசின் சொத்துக்கள் இவ்வாறு வீணாகி வருவதை மின்வாரிய அலுவலர்கள் கண்டுகொள்ளாத நிலையும் காணப்படுகிறது. எனவே இதனை மின்வாரியம் கவனிக்குமா?

No comments:

Post a Comment