Tuesday, 15 May 2018

சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழையின்றியும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமலும் ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசனம் உட்பட அைனத்து பாசன பகுதியிலும் சாகுபடி நடக்கவில்ைல. இந்தாண்டும் மேட்டூர் அணை நிரம்பவில்லை. ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1,000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர்,விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகள், 200க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஏரி, குளங்களில் நெய்வேலி காட்டாமணக்கு மற்றும் செடி கொடிகள் படர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.    கடந்தாண்டு தூர்வாரப்படாமல் ஏரிகளை ஆழப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் மண் எடுத்த ஏரிகளில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ஒழுங்குபடுத்தி மண் எடுக்கவில்லை. ஏரிகளில் அங்கொரு இடம் இங்கொரு இடமாக மண் எடுத்துள்ளனர். எனவே இத்தாண்டு அதிர்ஷ்டவசமாக மழை பெய்தாலும் கூட தண்ணீர் தேங்க கூடிய நிலையில் ஏரிகள் இல்லை. புதர்கள் மண்டி மண்மேடாக காட்சியளிக்கிறது. சாகுபடி நடைபெறவில்லை என்றாலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏரிகளில் தண்ணீர் தேங்க வேண்டும். எனவே தற்போதுள்ள கோடை பருவத்திலேயே ஏரி, குளங்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடைமடை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment