
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து உளு ந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் நேரடியாக உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. சில மாதங்களாக உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு இராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை முதன்மைக் கொள்முதல் முகமையாக அங்கீகாரம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தஞ்சாவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக நேபெட் நிறுவனத்துக்குக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ளூர் சந்தை விலைப்படி ஒரு கிலோ உளுந்து ரூ. 40 முதல் ரூ. 44 வரை உள்ளது. ஆனால், முதன்மை கொள்முதல் முகமையில் கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கு நேபெட் தர நிர்ணயப்படி ரூ. 54 வழங்கப்படும். தஞ்சாவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் இராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை கொள்முதல் முகமையில் உளுந்து விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் முதல் பக்கம் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். இந்த உளுந்து கொள்முதல் ஜூன் மாதம் வரை நடைபெறும். எனவே, விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த உளுந்துக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்று பயனடையலாம்.
No comments:
Post a Comment