Thursday, 10 May 2018

வேறு இடம் ஒதுக்கக்கோரி - நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்குறித்து மத்திய அரசுக்குக் கடிதம்


நெடுவாசல்: நெடுவாசலில் தொடங்கயிருந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி, ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.      புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.  இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.

புதுக்கோட்டையிலுள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெடுவாசலில் ஒன்றுகூடி, சுமார் 100 நாள்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். மக்கள் எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு, ஜெம் நிறுவனத்துக்கு குத்தகையை மாற்றித் தரவில்லை. ஜெம் நிறுவனம் 10 கடிதங்கள், மத்திய அரசு 3 கடிதங்கள் எழுதியும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி-க்கு அளிக்கப்பட்டிருந்த குத்தகையை ஜெம் நிறுவனத்துக்கு தமிழக அரசு மாற்றித் தரவில்லை என்று தெரிகிறது.  இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்கித் தரக் கோரி ,ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. திட்டம் தொடங்க தாமதம் ஆவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்கித் தரவேண்டும்'என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு உள்ளது. 

No comments:

Post a Comment