Wednesday, 16 May 2018

சேதுபாவாசத்திரம் பகுதியில் தென்னையை காப்பாற்றிய கோடை

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் தென்னையை காப்பாற்றும் வகையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் தென்னை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழ்க்கையின் ஜீவாதாரமாக 60 ஆயிரம் ஹெக்டேர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் கடைமடையில் வழக்கமாக நடைபெறும் ஒருபோகம் சம்பா சாகுபடியும் நடக்கவில்லை. கடந்த 2 ஆண்டுக்கு மேலாக கடைமடையில் பருவமழை பொய்த்து போய்விட்டது. மழையின்றி விவசாயம் கைவிட்டு போனநிலையில் தென்னையை மட்டுமே தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை விவசாயிகள் நம்பியிருந்தனர்.    ஆனால் முழுமையாக மழை பொய்த்துப்போனதால் கடந்தாண்டு இந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 80 அடியில் இருந்து நீர்மட்டம் 200 அடியை தாண்டிவிட்டது. ஒரு சில ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் கடைமடை பகுதி விவசாயிகளை ஏமாற்றி விட்டது. இந்தாண்டு பெய்த மிதமான மழையில் சற்று உயர்ந்திருந்த நீர்மட்டம் தற்போதே அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நீர்மட்டம் மேலும் குறைந்து வந்தது.  இதனால் போதுமான அளவு தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.   விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் ஜீவாதாரமாக கருதியிருந்த தென்னை மரங்கள், பல்வேறு இடங்களில் பட்டுப்போனது. மற்ற இடங்களில் வாடி வதங்க துவங்கியது. இதனால் மழை பெய்தால் மட்டுமே தென்னை சாகுபடியை காப்பாற்ற முடியுமென விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் பரவலாக ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தென்னையை காப்பாற்றும் வகையில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment