சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மானிய விலையில் சொட்டுநீர், தெளிப்புநீர் கருவி வாங்கி விவசாயிகள் பயன்பெற சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலத்தடி நீர்மட்டம் வருடா வருடம் வெகுவாக குறைந்து வரும் காரணத்தால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உள்ளது.இதற்கு பாத்திகள் மூலம் அதிக அளவில் தண்ணீர் பாய்ச்சுவதே காரணம். இம்முறையில் தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீர் செலவு அதிகமாவதுடன் களைகள் அதிகமாக முளைத்து மண்ணில் உள்ள உரச்சத்துக்களை எடுத்துகொள்கின்றன. இது போன்ற விரயங்களை தவிர்க்க சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் சிறந்த மாற்று முறையாகும். இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீரை, பயிரின் வேர்பாகத்தில் கிடைக்க செய்வதுடன், களைகள் முளைத்து உரச்சத்து வீனாக்குவது கட்டுப்படுத்தப்படும். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்களை திரவ உரமாக சொட்டு நீர் பாசனம் மூலம் அளிக்கலாம். இதனால் உரம் இடுவதற்கான ஆட்செலவுகள் வெகுவாக குறையும்.சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை, நிலக்கடலை, எள்,பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தென்னைக்கு சொட்டுநீர் பாசனமும் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனமும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொண்டு தங்களது விண்ணப்பத்தினை புகைப்படம்,குடும்ப அட்டை நகல்,ஆதார் நகல்,சிட்டாஅடங்கல்,நில வரைபடம் சிறு,குறு விவசாய சான்றுஆகியவற்றுடன் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் குத்தகை நிலமாக இருப்பின் ஏழு ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை நகல் பத்திரத்தின் நகலையும், பிறரிடமிருந்து ஆழ்குழாய் நீர் பெற்று சாகுபடி செய்யப்படுவதாயின் ஆழ்குழாய் கிணற்றின் உரிமையாளரிடம் இருந்து தண்ணீர் பயன்படுத்துவதற்காக சம்மத கடிதத்தினையும் பெற்று சமர்பிக்கவேண்டும். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Wednesday, 9 May 2018
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வேளாண்மை அலுவலர் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment