Wednesday, 9 May 2018

இயற்கை வேளாண்மை காய்கறிகள் சாகுபடியில் அதிக லாபம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

இயற்கை விவசாயத்தின் மூலம் காய்கறிகளை பயிரிட்டால் அதிகம் லாபம் கிடைக்கும் என தஞ்சாவூர் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மலர் மற்றும் காய்கறி பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:  கும்பகோணம் பகுதியில் நிலத்தடி நீர், மண்வளம், விற்பனைக்கான சந்தை, காய்களுக்கான தேவை ஆகியவை இருப்பதால் இப்பகுதியில் அதிகளவு விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இந்த சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனத்துக்காகவும், சூரிய மின்சக்திக்காகவும், குடில் அமைக்கவும் மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய காய்கறிகள் உள்ள தோட்டகலை பயிர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தின் வழியே அதிகளவில் காய்கறிகளை பயிரிட்டு, அதிக லாபம் பெற வேண்டும் என்றார் ஆட்சியர். இதில் வேளாண்மை இணை இயக்குநர் மதியழகன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஹர்ஷவர்தன் ஆகியோர் திட்டத்தின் செயல்பாடுகள், நோக்கம் பற்றியும், பசுமை குடில் அமைத்து வெப்ப தாக்குதலில் இருந்து காய்கறி, மலர் மற்றும் பழங்கள் சாகுபடியை பாதுகாக்கும்படியும் பேசினர். மலர் மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் உதவி பேராசிரியர் ராஜாரமேஷ், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய நோயியியல் பேராசிரியர் ராஜப்பன், சொட்டு நீர் பாசனத்தில் நிறுவனத்தின் பங்கு குறித்து குருசாமி ஆகியோர் பேசினர். இதில் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை ஆர்வலர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நிறைவாக, கும்பகோணம் உதவி இயக்குநர் சாந்திப்ரியா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment