Sunday, 10 June 2018

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் மராமத்து பணிகள் தீவிரம்

மல்லிப்பட்டினம்: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் கடலோரப் பகுதிகளில் விசைப்படகுகளை மராமத்து செய்வதில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இதுவரை 45 நாள்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் தற்போது, ஏப்-15 முதல் முதல் ஜூன் 15ஆம் தேதி வரை,  61 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீன்பிடித் தடைக்காலமான தற்சமயம் விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக உள்ளனர் மேலும், மீனவர்கள் தங்கள் வலைகளை சீர்செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித் தடைக்காலமாக உள்ளதால் துணைத் தொழில்களான ஐஸ்கட்டி தயாரிப்பு, தலைச்சுமை வியாபாரிகள், தேநீர் கடைகள், உணவகங்கள் என சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதியுதவி அளிக்க வேண்டும்.... இதுகுறித்து மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் எஸ்.எஸ்.சேக்தாவூது கூறியது: படகுகளை சீரமைக்க ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது. படகுகள் தொடர்ந்து இயங்கினால் பெருமளவு மராமத்து செலவுகள் ஏற்படாது. சிறுசிறு செலவுகளே ஏற்படும். ஆனால், தொடர்ந்து ஒரே இடத்தில் 60 நாள்களுக்கும் மேலாக நிறுத்தப்படுவதால் முழுமையான பராமரிப்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. கடலில் இருந்து விசைப்படகுகளை கரையில் ஏற்றி, இயந்திரம் பழுதுநீக்கம் செய்தல், மரக்கட்டைகளை மாற்றுதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது. புதுப்படகின் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை உள்ளது. மரப்பலகைகள் கன அடி ரூ. 400 முதல் 600 ரூபாய் வரை உள்ளது. இணைப்புக் கட்டை ரூ 1,500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை உள்ளது. மரவேலை தொழிலாளர்கள் கூலி ரூ 2 ஆயிரம் முதல் ரூ 3 ஆயிரம் வரை செலவாகிறது. மட்டி வேலை பார்த்து பைபர் பூசுவதற்கு ரூ. 2 லட்சம், வண்ணப்பூச்சுக்கு ரூ. 50 ஆயிரம் என செலவாகிறது. சாதாரணமாக பழுது நீக்கி மராமத்து செய்ய ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது. ஆண்டிற்கு ஆண்டு இந்த செலவு தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே அரசு நலிவடைந்து வரும் மீன்பிடித் தொழிலை பாதுகாத்திட, மீன்பிடித் தடைக்காலங்களில், மராமத்து வேலைகளுக்கு நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment