பேராவூரணி: ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, அம்மா உயிர் உரத்தைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அ. மதியழகன் தெரிவித்திருப்பது: ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால், மண் வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதைத் தவிர்த்திட விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் நலத்தை மீண்டும் வளமையாக்கினால் மட்டுமே நஞ்சற்ற உணவு உற்பத்தியைப் பெருக்க இயலும். குறைந்த செலவில், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த அங்கக இடுபொருட்களான உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மண் வளம் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கிறது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடும் குறைகிறது. மாவட்டத்தில் கும்பகோணம் சாக்கோட்டையில் அம்மா உயிர் உர உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), பாஸ்போ பாக்டீரியா போன்ற ஐந்து வகையான திட உயிர் உரங்கள் 200 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 5 லட்சம் பொட்டலங்களும், திரவ உயிர் உரங்கள் ஆண்டுக்கு 50,000 லிட்டரும் உற்பத்தி செய்யப்படுகிறது. திட உயிர் உரம் பொட்டலத்துக்கு ரூ. 6 வீதமும், திரவ உயிர் உரம் லிட்டருக்கு ரூ. 280 வீதமும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அம்மா உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு 20 - 25 சதவீதம் குறைகிறது. மண்ணின் தழை மற்றும் மணிச்சத்தின் அளவு அதிகரித்து கூடுதல் மகசூல் கிடைக்கிறது. திரவ உயிர் உரங்கள் உற்பத்தியில் அதிநவீன தொழில்நுட்பமான இணை ஓட்ட திரவ வடிப்பான் முறையை இந்தியாவிலேயே தமிழக அரசு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. 50,000 லிட்டர் திரவ உயிர் உரம் சாக்கோட்டை உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த உயிர் உரங்கள் மூலம் மண் வளம் காத்து தரமான விளைபொருள் உற்பத்தி, மாசற்ற சுற்றுச்சூழல், நச்சுத்தன்மையற்ற வேளாண் விளைபொருள் உற்பத்தி செய்யவும் உயிர் உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அம்மா உயிர் உரங்கள் என பெயரிட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி ரசாயன உரப் பயன்பாட்டை குறைத்து, அம்மா உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
Thursday, 21 June 2018
அம்மா உயிர் உரத்தைப் பயன்படுத்த வேளாண்மைத் துறை வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment