Wednesday, 27 June 2018

கால்நடைகளுக்கு அசோலா செடியை உணவாக வழங்க பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தல்

பேராவூரணி வட்டாரம் துலுக்கவிடுதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான தீவனப் புல் வளர்த்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தலைமை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சுரேஷ் வரவேற்றார். பயிற்சியில் தஞ்சாவூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்லா, உதவி பேராசிரியர் ஏ.இளமுருகன் ஆகியோர் பேசினர்.  இப்பயிற்சி முகாமில், “ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு சாதாரணமாக உணவாக கொடுக்கப்படும் பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்து மிகுந்த அடர் தீவனங்கள், மினரல் மிக்ஸர்கள், பசும் தீவனங்கள், புற்கள், சூபாபுல், அகத்தி கீரை போன்ற புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த பசுந்தழை தீவன உணவு வகைகளை கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கான பிரத்யேகமாக அசோலா என்ற நீரில் வளரும் பாசி இனச் செடியினை வளர்த்து உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது.  அசோலா பாசியில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள் நிறைந்து உள்ளது என்றும் இதனை பசுமாடுகளுக்கு கொடுக்கும் போது பால்உற்பத்தி அதிகமாகிறது. அசோலா பாசியானது கால்நடைகளுக்கு உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மீன்களுக்கும், பன்றிகளுக்கும் சிறந்த உணவாக பயன்படுகிறது. இதனை நெல் வயல்களில் வளர்ந்து மிதித்து விடும் போது சிறந்த தழை உரமாகவும் பயன்படுகிறது என அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஆவணம் சரக கால்நடை மருத்துவர் கே.முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் எஸ்.நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் ஏ.சுந்தரராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment