Saturday, 23 June 2018

தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்:-  குறைந்த நீர் செலவில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறி, பழப்பயிர், மலர், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மூலம் 40 அல்லது 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. வீரிய ஒட்டுரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20,000 மதிப்பில் வழங்கப்படுகிறது. மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர்நடவு முறையில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ.9,840 மதிப்பிலும், கொய்யாவிற்கு ரூ.17,599 மதிப்பிலும் நடவுச் செடிகள் வழங்கப்படுகின்றன. திசு வாழை பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ. 37,500 மதிப்பில் நடவுச்செடி மற்றும் இடுபொருட்கள், பப்பாளி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ. 23,100 மதிப்பில் வீரிய ஒட்டுரக நடவுச்செடி மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படும்.மிளகாய் சுவை தாளித பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.12,000 வீதம் நடவுச்செடி மற்றும் மிளகு பல்லாண்டு சுவைதாளித பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.20,000 வீதம் நடவுச்செடி மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும். உதிரி மலரான மல்லிகை மலரை சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ. 16,000- வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. சம்பங்கி கிழங்கு வகை மலர்களுக்க ரூ.60,000- வீதம் மானியமும், முந்திரி பழைய தோட்டம் புதுப்பித்தல் மற்றும் மா பழைய தோட்டம் புதுப்பித்தல் மேற்கொள்ள எக்டருக்கு ரூ.20,000- வீதம் முந்திரி ஒட்டு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.12,000 வீதம் வீரிய நாற்று வழங்கப்படுகிறது.மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொலைபேசி எண் 04362- 271880 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment