பேராவூரணி :நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் நில உரிமையாளர்- நூற்றாண்டுகளாக குடியிருந்து வருவோர் இடையேயான இடப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. பேராவூரணி அடுத்த நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் புல எண் 42/21, 178/4, 75/1A, 75/1B, 33/1 ஆகியவற்றில் கிரயம் பெற்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நில உரிமையாளர்களுக்கு இடையேயான பாகப்பிரிவினையில் பொதுமக்கள் குடியிருந்து வரும் இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி நில அளவை செய்யப்போவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் எம்எல்ஏ கோவிந்தராசு முன்னிலையில், தாசில்தார் பாஸ்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இட உரிமையாளர்கள் சீனிவாசன் தரப்பு வக்கீல் கோவிந்தராசு, ராமனுஜம் தரப்பு வக்கீல் பொன்னுலிங்கம், கிராம மக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், சுந்தர்ராஜன், நீலகண்டன், வீராசாமி பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் பதிவு செய்யப்பட்ட கிரயப்பத்திரம் மூலம் கிரயம் பெற்று பூர்வீகமாக குடியிருந்து வருபவர்களுக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருமாறு பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நில உரிமையாளர்கள் சீனிவாசன், ராமனுஜம் தரப்பு வக்கீல்கள் கூறுகையில், நில உரிமையாளர்களின் தாயார் செண்பகத்தம்மாளிடம் பத்திரப்பதிவு செய்து கிரயம் பெற்ற நபர்களுக்கும், பூர்வீகமாக குடியிருந்து வருபவர்களுக்கும், தங்களது அனுபவத்தில் உள்ள நிலங்களை பரிசீலனை செய்து ஆவணங்களை சரிபார்த்து தொடர்புடைய நபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கிரயமாக எழுதி தருவது. ஜூன் முதல் வாரத்தில் குறிப்பிட்ட தேதியில் ஆர்டிஓ, எம்எல்ஏ முன்னிலையில் நில உரிமையாளர்கள் சீனிவாசன், ராமனுஜமை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வரும் 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக அனுபவம் செய்து வரும் நபர்களிடம் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வகைப்படுத்தி பத்திரப்பதிவு செய்து கொள்ளும் பொருட்டு தயார் செய்து நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நீண்ட ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த இடபிரச்னையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
Saturday, 12 May 2018
நாட்டாணிக்கோட்டை நில உரிமையாளர்கள்- மக்களுக்கான இடப்பிரச்னையில் சமூக முடிவு எட்டியது02
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment