Friday, 22 June 2018

தஞ்சாவூரில் ஜூலை 1-இல் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜூலை 1-ம் தேதி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி தமிழ்நாடு பொன்விழா ஆண்டாகக் கொண்டாட  மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவாக மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்படும் கலைப் போட்டிகளில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலைகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.  இப்போட்டிகளில் 15 வயது முதல் 30 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் மற்றும் தொழில்முறைக் கலைஞர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 என வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநிலக் கலைப் போட்டிகளில் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசாக ரூ. 25,000,  4 கிராம் தங்கப்பதக்கம்,  மூன்றாம் பரிசாக ரூ. 10,000, 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.  மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜூலை 1-ம் தேதி காலை 9 மணிக்கு சென்று தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment