Thursday, 14 June 2018

சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம்: 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாய்மர படகு, பைபர் படகு, கட்டுமரம் உள்ளிட்ட நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறைக்காற்றும் வீசியது. இதன் காரணமாக வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் 4 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.  இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-  சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது. கடலில் ராட்சத அலைகள் அடிக்கடி எழுகின்றன. 4 அடி உயரம் முதல் 6 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதால் சிறிய வகை படகுகளை கடலுக்குள் எடுத்து செல்வது கடினம். எனவே மீன்பிடிக்க செல்லவில்லை.  இவ்வாறு மீனவர்கள் கூறினர்.  மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment