Sunday, 24 June 2018

திருச்சிற்றம்பலம் கடை வீதியில் பொதுக் கழிவறை இல்லாததால் மக்கள் அவதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் முக்கிய பகுதியாகும். திருச்சிற்றம்பலத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க இங்குள்ள கடைவீதிக்கு தான் வரவேண்டும். இங்குள்ள கடைவீதியில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.  பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பேராவூரணி, கறம்பக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் கிராம மக்கள் இங்கிருந்து தான் பயணப்பட வேண்டி உள்ளது. இதனால், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனாலும் இங்குள்ள கடைவீதியில் பொதுக் கழிவறை இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள், குறிப்பாக மாணவிகள், பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், "முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பொதுக்கழிவறை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தகர்கள், பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை கருத்தில் கொள்ள வேண்டும். திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக தஞ்சை மாவட்டத்தை மாற்ற உத்வேகத்துடன் செயல்படும் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment