Wednesday, 20 June 2018

தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம்

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் வட்டாரம் உடையநாட்டில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் பற்றிய பயிற்சி நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் அப்துல்ஜபார் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ராஜரத்தினம் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் அய்யம்பெருமாள் பேசுகையில், தென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது கடைமடை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி நாட்டுரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு ஒன்றரை கிலோ இட வேண்டும். 2 வருட கன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 650 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா ஒரு கிலோ, வேப்பம்புண்ணாக்கு இரண்டரை கிலோ, மூன்று வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 975 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா ஒன்றரை கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம். 4 வருட கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1 கிலோ 300 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். 5 வருட கன்றுக்கு தொழு உரம் 50 கிலோ, யூரியா 1 கிலோ 300 கிராம். சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.    மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண்சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் பிரச்னை குறைந்து ஆண்டுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும். தென்னையை தாக்கும் தஞ்சை வாடல்நோய் மற்றும் குறுத்தழுகல் நோயை கட்டுப்படுத்த வறட்சி காலத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து அதிக வருமானம் பெறலாம் என்றார்.வேளாண்மை துணை அலுவலர் லட்சுமணன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜீ பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment